சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 9 ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 8வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வியடைந்த ஹைதராபாத், அடுத்து நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் குவாலிபையர் 2ம் போட்டியில் விளையாடி, மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முயற்சி செய்யும்.

2018ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று இன்று தொடங்கியது. 3 போட்டிகளாக நடக்கும் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை அணி, ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

ஐதராபாத் அணியில் ஷிகர் தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ப்ரத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ப்ரத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, சென்னை அணி 140 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் இறங்கினர். வாட்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இந்த ஆட்டத்திலும் ராயுடு டக் அவுட் ஆனார். நன்றாக விளையாடுகிறார் என்று கண்பட்டுவிட்டது போல…
ஐதராபாத் அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் சென்னை அணி தோல்வி உறுதி என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால்,  டு பிளசிஸ் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று அரை சதமடித்தார்.
இறுதியில், பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை அணி வெற்றிபெற 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி.

இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் சென்னை அணி பஞ்சாபை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி இன்று கொஞ்சம் சிறப்பாக பந்து வீசியது. வந்த வேகத்தில் கிரிஸ் கெயில் டக் அவுட் ஆனார். இதனால், பஞ்சாப் அணி ரன் குவிப்பது தவிர்க்கப்பட்டது. லோக்கேஷ் ராகுல், ஆரோன் ஃபின்ச் உள்ளிட்டவர்களும் ரன் குவிக்கத் தவறினர்.

மனோஜ் திவாரி (35), கருண் நாயர் (54) ரன்கள் எடுத்து அந்த அணி நல்ல ரன்களை எடுக்க உதவினர். கடைசியில், 19.4 ஒவரில் 153 ரன்னுக்கு பஞ்சாப் அணி ஆல் அவுட் ஆனது.

இன்றைய போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைய முடியும் என்ற நிலையில் பஞ்சாப் விளையாடி வருகிறது. ஆனால், தற்போது எடுத்துள்ள ரன்களை கணக்கிட்டால், சென்னை அணியை 100 ரன்னுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் உள்ளது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்தது. கடைசியில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட நுழைய முடியாத நிலையில் இருப்பது பஞ்சாப் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.