கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி!

Author: SRK | Posted Date : 22-04-2018 19:57 PM

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சென்னை, துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுபிளேஸிஸை சொற்ப ரன்களில் இழந்தது. ஆனால்,  ரெய்னா ராயுடு ஜோடி சேர்ந்து சென்னையை சரிவில் இருந்து மீட்டனர். சென்னைக்காக தனது முதல் அரைசதத்தை ராயுடு அடிக்க, மறுமுனையில் ரெய்னாவும் அரைசதம் கண்டார். 37 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த போது, ராயுடு ரன் அவுட்டானார். அதன் பின் தோனி(25), ரெய்னாவுடன்(54) சேர, 20 ஓவர்கள் முடிவில் சென்னை 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

துவக்க வீரர் தவான் இல்லாமல் களமிறங்கியது ஹைதராபாத். அற்புதமாக பந்துவீசிய சென்னையின் சஹார், துவக்க வீரர் புய், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா ஆகிய மூவரின் விக்கெட்டை துவக்கத்திலேயே வீழ்த்தினார். அதன்பின், கேப்டன் கேன் வில்லியம்சன் ஷாகிப் அல் ஹசனுடனும், பின்னர் யூசுப் பதானுடனும் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். 84 ரன்கள் எடுத்திருந்த போது, வில்லியம்சன் அவுட்டாக, 45 ரன்களில் பதானும் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவரில் ஹைதராபாத் வெல்ல 19 ரன்கள் தேவைப்பட்டது.

பிராவோ வீசிய அந்த ஓவரில், ரஷீத் கான், ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடிக்க, கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பிராவோ யார்க்கர் வீச, ஒரு ரன் மட்டுமே ரஷீதால் எடுக்க முடிந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.