தோனியின் அதிரடி வீண்; 4 ரன்களில் பஞ்சாப் வெற்றி!

Author: SRK | Posted Date : 16-04-2018 00:21 AM

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், நேற்று இரவு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொஹாலியில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் துவக்க வீரராக களமிறங்கினார். கெயில்(63) மற்றும் ராகுல்(37) ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் விளாசினர். அதிரடி மன்னன் கெயில், வெறும் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார். பின் வந்தவர்களில் மயங்க் அகர்வால்(30) மற்றும் கருண் நாயர் (29) சிறப்பாக விளையாட, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.

மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த சென்னை அணியில், ரெய்னா இல்லாததால், முரளி விஜய் சேர்க்கப்பட்டிருந்தார். 39 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில், ராயுடு – தோனி ஜோடி சேர்ந்த சென்னையை நகர்த்தினர். 3வது விக்கெட்டுக்கு இரண்டு பெரும் 57 ரன்கள் எடுத்தனர். 49 ரன்கள் எடுத்திருந்த போது, ராயுடு ரன் அவுட்டானார். அதன் பின், தோனி – ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடியது. தோனிக்கு முதுகில் வலி ஏற்பட்டதால், அதிகம் ரன் ஓடமுடியாமல் தவித்தார்.

கடைசி 24 பந்துகளில் 67 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக விளையாடிய தோனி, சென்னையை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு வந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பஞ்சாப் அணியின், மோஹித் சர்மா மிக சிறப்பாக பந்துவீசி, தோனியை ஷாட் அடிக்க விடாமல் செய்தார். இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இது ஐபிஎல்-லில் தோனி அடித்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.

இந்த வெற்றியால், புள்ளி பட்டியலில் பஞ்சாப் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை 3ம் இடத்திற்கு இறங்கியுள்ளது. ஆட்டநாயகனாக கெயில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.