46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!

Author: SRK | Posted Date : 18-04-2018 00:19 AM

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுடன் மோதிய மும்பை, 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. பெங்களூரின் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில், மும்பை வீரர்கள் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் போல்டானார்கள். மோசமான துவக்கத்தை கண்டு மும்பை ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால், அதன்பின் எவின் லீவிஸ் – ரோஹித் ஷர்மா ஜோடி, 108 ரன்கள் சேர்த்தது. பின்னர் தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் ரோஹித், 94 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில், மும்பை 213 ரன்கள் அடித்தது.

அதன்பின் வந்த பெங்களூரு அணி, ஆட்டத்தை அதிரடியாக துவக்கினாலும், மும்பையின் மெக்ளெனகேன் வீசிய 5வது ஓவரில், டி காக் மற்றும் டி வில்லியர்ஸ் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனை கொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி வந்த கோலியுடன், மந்தீப் சிங் ரன்கள் சேர்த்தார். 10வது ஓவரை வீசிய க்ருனால் பாண்ட்யா, மந்தீப் சிங் மற்றும் ஆண்டர்சன் விக்கெட்களை வீழ்த்தி, பெங்களூருக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார். கோலியை தவிர வேறு எந்த வீரரும் 20 ரன் கூட எடுக்காத நிலையில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. கோலி 62 பந்துகளில் 92 ரன்கள் விளாசி அவுட்டானார்.

46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை மும்பை பதிவு செய்தது. புள்ளி பட்டியலில், மும்பை 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.