ஐ.பி.எல் இதுவரை சந்தித்த பிரச்னைகள்!

Author: Nandini L | Posted Date : 11-04-2018 12:32 PM

2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டி துவங்கப்பட்டது. இப்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்து, 11-வது வருடத்திற்குள் வெற்றிகரமாக ஐ.பி.எல் வெற்றிகரமாக காலெடுத்து வைத்துள்ளது. திறமைமிக்க பல பிரபலமில்லாத வீரர்களும் இந்த போட்டி மூலம் கண்டறியப்பட்டனர். இந்த போட்டிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறதோ.. அதே அளவிற்கு பிரச்னைகளையும் சந்தித்துள்ளது. தற்போது எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஐ.பி.எல் போட்டி கண்ட எதிர்ப்புகளை மீண்டும் இங்கே பார்ப்போம்..

ஐ.பி.எல் 2009: ஷிவ சேனா கட்சி தலைவர் உதவ் தக்கரி, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க கூடாது என்று கோரிக்கை விடுத்தார். மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கு பின் பாகிஸ்தான் வீரர்கள் எவரும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும், மும்பையில் நடந்த தாக்குதல் காரணத்தினாலும், மக்களவை தேர்தல் நடைபெற்றதாலும், 2009ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

ஐ.பி.எல் 2010: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான் இருக்கிறார். ஐ.பி.எல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டதுக்கு, ஷாருக்கான் கூறிய கருத்து விமர்சனத்துக்கு உள்ளானது. ஐ.பி.எல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களும் பங்கேற்றிருக்கலாம் என்று சொன்னதற்கு, ஷாருக்கான் மீது அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ஷாருக்கான் நடித்து வந்த ‘மை நேம் இஸ் கான்’ என்ற படத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஐ.பி.எல் 2013: தமிழகத்தில் அப்போது இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என்று கேட்டுக் கொண்டார். இதனால் இலங்கை வீரர்கள் சென்னையில் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை. ஈழத்தமிழர்களின் பிரச்னை காரணமாக வீரர்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் 2014: இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதன்படி முதல்கட்ட போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில், இரண்டாம் கட்ட போட்டி இந்தியாவிலும் நடைபெற்றது.

ஐ.பி.எல் 2016: இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல் போட்டிகளை இங்கு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. அதில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக 22,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் இங்கு நடக்கும் போட்டிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மும்பை, புனே, நாக்பூரில் நடக்க வேண்டிய போட்டிகளின் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

ஐ.பி.எல் 2018: தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் இந்த ஆண்டு சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கியது. ஆனால், போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என்று சில அரசியல் அமைப்புகள், போராட்டக்காரர்கள், பிரபலங்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில், போட்டி நடந்த அன்று பாதுகாப்பை மீறி மைதானத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், போராட்டம் நடத்திய அரசியல்வாதிகள், பிரபலங்களை போலீசார் கைது செய்தனர். போட்டி நடக்கும் இடத்துக்கு பாதுகாப்பில் நான்காயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனால் சி.எஸ்.கே அணி வீரர்கள் மைதானத்திற்குள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். மைதானத்திற்கு வெளியே போராட்டக்களம் போர்க்களமாக காட்சியளிக்க, மைதானத்திற்குள் சி.எஸ்.கே- கே.கே.ஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து முடிந்தது. இனி அடுத்த போட்டியின்போது என்ன செய்யப்போகிறார்களோ என்ற அச்ச உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.