டெல்லியை பந்தாடியது கொல்கத்தா!

Author: SRK | Posted Date : 17-04-2018 01:20 AM

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 71 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

டாஸ் வென்ற டெல்லி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தாவின் துவக்க வீரர் நரேன் 1 ரன்னில் இழந்தாலும், பின்னர் வந்த உத்தப்பா(35) மற்றும் கிறிஸ் லின்(31), அதிரடி துவக்கம் தந்தனர். அதன்பின் வந்த ராணா(59) அரைசதம் அடிக்க, சிக்ஸர் மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் 11 பந்துகளில் 6 சிக்ஸர்களோடு, 41 ரன்கள் விளாசி பின் அவுட்டானார். கடைசியாக களமிறங்கிய வீரர்கள் சொதப்ப, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

அதன்பின் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ், 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. அடுத்து வந்த ரிஷப் பந்த்(43) – மேக்ஸ்வெல்(47) ஜோடி 62 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்த வீரர்கள் மளமளவென விக்கெட்டை பறிகொடுக்க, 14.2 ஓவர்களிலேயே 129 ரன்களில் ஆல் அவுட்டானது.

71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா, மற்ற அணிகளை விட ஒரு போட்டி அதிகம் விளையாடியுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றது. டெல்லி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.