கடைசி பந்தில் த்ரில் வெற்றி… மும்பையை வீழ்த்தியது ஹைதராபாத்!

Author: SRK | Posted Date : 13-04-2018 00:18 AM

மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி, கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ், 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் விளையாடாத நிலையிலும் கூட, சிறப்பாக பந்துவீசிய ஹைதராபாத் அணி வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை ரன் குவிக்க விடாமல் திணற வைத்தனர். அதிகபட்சமாக மும்பையின் ஏவின் லீவிஸ் 29, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்ட் தலா 28 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத்தின் சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல் மற்றும் ஸ்டான்லேக் தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தவான்(45) மற்றும் சாஹா(22) நல்ல துவக்கம் தந்தனர். அதன்பிறகு, மும்பையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டேவின் பந்தில் மளமளவென விக்கெட்களை இழந்து 107/5 என ஹைதராபாத் தவித்தது. பின்னர், யூசுப் பதான் மற்றும் தீபக் ஹூடா சேர்ந்து நிதானமாக விளையாடினர். 136 ரன்கள் எடுத்திருந்த போது, யூசுப் பதான், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, கவுல் என தொடர்ந்து 4 விக்கெட்கள் வீழ்ந்தன.

1 விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், கடைசி ஓவரில் தீபக் ஹூடா மற்றும் ஸ்டான்லேக் ஜோடி 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஹூடா சிக்ஸர் அடித்து பவுலருக்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில், போட்டி டிரா ஆனது. ஆனால், கடைசி பந்தில் ஸ்டான்லேக் ஃபோர் அடித்து, ஹைதராபாத்தின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம்,  ஹைதராபாத், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.