தவான் அதிரடியில் ராஜஸ்தானை துவம்சம் செய்தது ஹைதராபாத்!

Author: SRK | Posted Date : 09-04-2018 23:37 PM

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 125 ரன்களில் ஆல் அவுட்டானது. துவக்கத்திலேயே தடுமாறினாலும், சஞ்சு சேம்சன் அசத்தலாக விளையாடி, அணியை 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார். 49 ரன்களில் சேம்சங் விக்கெட்டை இழந்தவுடன், மளமளவென மற்ற வீரர்களும் சரிந்தனர். ஹைதராபாத் அணியின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் சித்தார்த் கவுல் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் சொந்த மண்ணில், 126 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 15.5 ஓவர்களில் 127 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. துவக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் ஷேன் வில்லியம்சன் இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். அரைசதம் அடித்த தவான், 57 பந்துகளில் 77 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 1.77 என்ற ரன் ரேட் பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது ஹைதராபாத்.