டி வில்லியர்ஸ் அதிரடி; பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு

Author: SRK | Posted Date : 14-04-2018 01:10 AM

நேற்று பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் அதிரடி துவக்கம் தந்தபோதும், உமேஷ் யாதவ் வீசிய 4வது ஓவரில் பஞ்சாப் வீரர்கள் 3 பேர் அவுட்டானார்கள். பின்னர், ராகுல் – கருண் நாயர் சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். 102 ரன்களை பஞ்சாப் எடுத்தபோது இருவரும் அவுட்டானார்கள். அதன்பின் கேப்டன் அஷ்வின் 31 ரன்கள் விளாசினார். 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப்.

சொந்த மண்ணில் 156 ரன்களை இலக்காக கொண்டு இறங்கியது பெங்களூரு. ஆனால், முதல் ஓவரில் மெக்குல்லமும், 5வது ஓவரில் கோலியும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்,  டி காக் – டி வில்லியர்ஸ் சேர்ந்து ரன்கள் குவித்தனர். 45 ரன்கள் எடுத்திருந்த போது, டி காக் அவுட்டானார். நிதானமாக விளையாடி வந்த டி வில்லியர்ஸ் 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு ஃபோர் அடித்து, ரன் ரேட்டை அதிகப்படுத்தினார். 19வது ஓவரில் டி வில்லியர்ஸும், மந்தீப் சிங்கும் அவுட்டானார்கள். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வாஷிங்க்டன் சுந்தர், இரண்டு ஃபோர் அடித்து பெங்களூரின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த ஐபிஎலில் பெங்களூரு தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டிக்கு பின், புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் பஞ்சாபும், 5வது இடத்தில் பெங்களூரும் உள்ளன.