வாட்சன் சதம்; ராஜஸ்தானை துவம்சம் செய்தது சிஎஸ்கே!

Author: SRK | Posted Date : 21-04-2018 02:50 AM

நேற்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸை, சென்னை சூப்பர் கிங்ஸ் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் ராயுடு முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். ராயுடு(12) அவுட்டான பிறகு, கலக்கலாக விளையாடி வந்த வாட்சனுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும், 44 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தனர். 46 ரன்கள் எடுத்திருந்த போது, கோபால் பந்தில் ரெய்னா வீழ்ந்தார்.

ஆனால், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வாட்சன், 51 பந்துகளில் சதம் அடித்தார். இது ஐபிஎல் வரலாற்றில் அவர் அடிக்கும் 3வது சதமும் சிஎஸ்கேக்கு அடிக்கும் முதல் சதமும் ஆகும். இதற்கு முன், 2013ம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் விளையாடிய போது, சென்னைக்கு எதிராக வாட்சன் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் முடிவில், சிஎஸ்கே 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானின் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்களும், லக்ஹ்லின் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் க்ளாஸன்(7), ரஹானே(16) மற்றும் சஞ்சு சேம்சன்(2) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 32 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தவித்தது ராஜஸ்தான். அதன் பின், வந்த பட்லர் – ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து 34 பந்துகளில் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அளித்தனர்.

11வது ஓவரை வீசிய பிராவோ, பட்லரின்(22) விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின், மீண்டும் ராஜஸ்தான் அணி வீரர்கள் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ், 45 ரன்கள் அடித்திருந்த போது, தாஹிரின் பந்தில் அவுட்டானார். 18.3 ஓவரிலேயே 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான். தாகூர், சஹார், பிராவோ மற்றும் கரண் சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

64 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்று, ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.