தமன்னா ஆட, சிஎஸ்கே அடிக்க… களைகட்டப்போகும் ஐபிஎல்

Author: Nandini L | Posted Date : 07-04-2018 12:55 PM

கிரிக்கெட் ரசிகர்களுக்கு, 51 நாட்கள் விருந்து படைக்கவிருக்கும், 11ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது.‌

ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவில் தமன்னா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தோள்பட்டை காயம் காரணமாக தொடக்க விழா நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஹிருத்திக் ரோஷன் பங்கேற்கவுள்ளார். வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் ஐபிஎல் தொடக்க விழாவில் களைகட்டவுள்ளன.

11ஆவது ஆண்டில் அடியெடித்து வைக்கிறது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் 3 அணிகளும், மீண்டும் சாம்பியனாகும் முனைப்பில் 5 அணிகளும் நடப்புத் தொடரில் களம் காண்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 போட்டிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

51 நாட்கள். 60 ஆட்டங்கள். என கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோடைவிருந்து படைக்கக் காத்திருக்கிறது ஐபிஎல் சீசன் 11. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மறுவரவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடுகிறது.

போட்டியில் பங்கேற்கும் சென்னை, மும்பை, பெங்களூரு, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி , ராஜஸ்தான் ஆகிய அணிகள் மற்ற அணிகளுடன் தலா இரு முறை லீக் சுற்றில் விளையாடவுள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மும்பையில் தொடங்கி மும்பையிலேயே முடியும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.