டெல்லி டேர்டெவில்ஸ்: ரபாடாவுக்கு பதில் ப்ளுன்கேட் தேர்வு

Author: Nandini L | Posted Date : 07-04-2018 17:59 PM

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு பதில் இங்கிலாந்து வீரர் லியாம் ப்ளுன்கேட் டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ககிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தார். அந்த அணிக்கு எதிரான கடைசி போட்டியில், அவரது முதுகுதண்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. 22 வயதான ரபாடா, ஐபிஎல்-லில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஏலத்தில், 4.2 கோடி ருபாய் கொடுத்து, டெல்லி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், இந்த காயத்தால், அவர் 3 மாதங்கள் வரை விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் இந்த சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் இருந்து ரபாடா விலகினார். இந்த நிலையில், அவருக்கு பதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளுன்கேட்டை டெல்லி அணி தேர்வு செய்திருக்கிறது. ப்ளுன்கேட் 119 டி20 போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

நாளை (ஏப்ரல் 8) நடக்கும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாபுடன் மோதிகின்றது.