ஹைதராபாத்: வார்னருக்கு பதில் கேன் வில்லியம்சன் கேப்டனாக தேர்வு

Author: Nandini L | Posted Date : 06-04-2018 12:03 PM

ஐ.பி.எல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பதில் வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஐ.பி.எல் போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டார். பின்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தாண்டு சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஹைதராபாத் அணிக்கான புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணி நடந்து வந்த நிலையில், அணி நிர்வாகம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனை, ஹைதராபாத் அணி கேப்டனாக நியமித்துள்ளது.

இது குறித்து வில்லியம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “2018 சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணி கேப்டனாக பொறுப்பேற்றுள்ளேன். அணியில் இருக்கும் சிறந்த வீரர்களுடன் களமிறங்கவும், எனக்கான சவால்களை எதிர்கொள்ளவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.