ஐ.பி.எல்: ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு பதில் க்ளாஸென் தேர்வு!

Author: Nandini L | Posted Date : 06-04-2018 12:05 PM

தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஹெய்ன்ரிச் க்ளாஸெனை, ஸ்மித்துக்கு பதிலாக தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

11-வது ஐ.பி.எல் போட்டியில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பிசிசிஐ, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அஜின்க்யா ரஹானே தேர்வானார். இதற்கிடையே ஸ்மித்துக்கு பதில் மாற்று வீரராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசித்து வந்தது ராஜஸ்தான் அணி. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஹெய்ன்ரிச் க்ளாஸென் ராஜஸ்தான் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

க்ளாஸென் அணியில் இடம் பெறுவது பற்றி பிசிசிஐ இன்று உறுதி செய்தது. அவரை அடிப்படை தொகையான ரூ. 50 லட்சம் வழங்கி ராஜஸ்தான் தேர்வு செய்துள்ளது. 49 டி20 போட்டிகளில் க்ளாஸென், 1043 ரன் அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 146.28.