ஐ.பி.எல் துவக்க விழா: ரன்வீர் சிங் வெளியேறினார்! ஹ்ரித்திக் ரோஷன் நடனம்?

Author: Nandini L | Posted Date : 06-04-2018 12:08 PM

ஐ.பி.எல் துவக்க விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11-வது ஐ.பி.எல் போட்டி வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்க இருக்கிறது. துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டிக்கு முன் 45 நிமிடங்கள் துவக்க விழா நடைபெறும்.

விழாவில் நடிகர்கள் ரன்வீர் சிங், வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரினீதி சோப்ரா, தமன்னா ஆகியோர் நடனம் ஆட உள்ளனர். இவர்களை தவிர நடன புயல் பிரபு தேவாவும் மேடையை அலங்கரிக்க இருக்கிறார் என்று பிசிசிஐ தரப்பு தெரிவித்தது. இந்த விழாவில் 15 நிமிடம் ஆடுவதற்காக நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் அனைவரிடத்திலும் ஆச்சரியமடையச் செய்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவலால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஒரு கால்பந்து போட்டியில் விளையாடியுள்ள ரன்வீருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர் அவரை ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். அவர் நடனமாடும் போது, தோள்பட்டையின் காயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மருத்துவர், நடனமாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இதனால், வரும் ஐ.பி.எல் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் அவர் நடித்து வரும் குல்லி பாய் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர ரன்வீர், சிம்பா மற்றும் 83 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 83 படத்தில் ரன்வீர், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

ரன்வீர் விலகியதால் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பிசிசிஐ உறுப்பினர், “துரதிஷ்டவசமாக ரன்வீர் சிங் துவக்க விழாவில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நடிகர் ஹ்ரித்திக் ரோஷனிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இன்னும் சில தினங்களில் ஹ்ரித்திக் ரோஷனின் ஒப்பந்தம் முடிவான பிறகு, பிசிசிஐ இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை வெளியிடும்”என்று கூறியுள்ளார்.