ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை ரூ.16,347 கோடிக்கு வாங்கியது ஸ்டார்

Author: Nandini L | Posted Date : 06-04-2018 12:07 PM

ஐந்து ஆண்டுக்கான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை ரூ.16,347 கோடிக்கு கொடுத்து வாங்கியுள்ளது ஸ்டார் டி.வி நிறுவனம்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்ட போது சோனி டி.வி-யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 10 ஆண்டுகள் சோனி நிறுவனம்தான் ஐ.பி.எல்-ஐ ஒளிபரப்பியது. 2015ம் ஆண்டு உலக டிஜிட்டல் உரிமை, நோவி டிஜிட்டல் நிறுவனத்துக்கு ரூ.302.2 கோடிக்கு கை மாறியது.

இந்தநிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான (2018 முதல் 2022ம் ஆண்டு வரை) ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிப்பரப்பு உரிமை ஏலம் நடந்தது. இதில், 24 நிறுவனங்கள் பங்கேற்றன. அதிகபட்சமாக ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் கேட்டது. இதைத் தொடர்ந்து ஒளிபரப்பு உரிமை ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இது குறித்து, பிசிசிஐ-ன் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி கூறுகையில், “ஒரு நீண்ட தொழில்நுட்ப மதிப்பீட்டிற்குப் பிறகு, ஸ்டார் இந்தியா வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு, சோனி நிறுவனம் ரூ.8200 கோடி கொடுத்து, 10 வருடத்திற்கான உரிமையை பெற்றிருந்தது. ஆனால், அதில் இரண்டு மடங்கு தொகை கொடுத்து ஐந்து ஆண்டு உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.