ஐபிஎல்-லில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விலகல்

Author: Nandini L | Posted Date : 06-04-2018 12:09 PM

இந்தியன் பிரீமியர் லீக்  டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரபாடா,  காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த வேகபந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தார். கடைசி போட்டி இரு தினகளுக்கு முன் முடிவடைந்த போது, அவரது முதுகுதண்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

22 வயதான ரபாடா, ஐபிஎல்-லில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஏலத்தில், 4.2 கோடி ருபாய் கொடுத்து, டெல்லி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், இந்த காயத்தால், அவர் 3 மாதங்கள் வரை விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் தனது உடல் மிகவும் சோர்வடைந்துள்ளதாகவும், இந்த இடைவேளையை பயன்படுத்தி புத்துணர்ச்சியோடு திரும்ப வருவேன் என்றும் ரபாடா கூறியுள்ளார்.